Sunday, 13 May 2012

நாலாயிரத்தில் எம்பெருமானின் கல்யாண குணங்கள்

எம்பெருமானுக்கு அநேக கல்யாண குணங்கள் உண்டு என்பது எம்பெருமானார் தரிசனத்தின் முக்கியமான வாதம். இன்று எம்பெருமானின் மூன்று கல்யாண குணங்களை பற்றி சற்று விரிவாக பார்த்து மகிழ்வோம்:

காருண்யம்:
திருப்பாவை "ஆழி மழைக் கண்ணா" பாசுரத்தில், “ஊழி முதல்வன்
உருவம்
போல் மெய் கருத்து” என்று ஆண்டாள் அருளிச்செய்கிறாள். ஊழி முதல்வன் = ஜகத் காரண பூதன் = உலகை ஸ்ரிஷ்டித்த பற்பநாபன்.
ஏன் பற்பநாபானின் திருமேனி நிறம் போல் மெய்கருக்க வேண்டும்? ஏன் இராமனின் திருமேனி நிறம் கொள்ளக் கூடாது? ஏன் கண்ணனின் திருமேனி நிறம் கொள்ளக் கூடாது?
இந்த உலகத்தை படைக்கும் பற்பநாபனானவன் அளவில்லாத காருண்யத்தின் இருப்பிடம். அதாவது, நாம் செய்யும் பாவங்களை எல்லாம் சகித்துக்கொண்டு ஒவ்வொரு முறையும் இந்த உலகத்தை படைத்து நாம் உய்ய இன்னொரு வாய்ப்பளிக்கும் கருணைக் கடல் அல்லவோ அவன்? அவன் காருண்யத்துக்கு முன் ஒப்பொருவர் இல்லை. அளவுக்கு அதிகமாக காருண்யம் உடையவன் ஆதலால் அவன் திருமேனி கருமை நிறத்தை கொண்டதாக அமைகிறது. மழை தரும் கார் முகில்கள் மழை தந்தபின் வெண்ணிறமாக மாறி விடும். ஆனால், பற்பநாபன் இடையே காருண்யத்துக்கு தட்டுப்பாடு ஏற்படுவதே இல்லை. எனவே அவன் காருண்யத்துக்கு யாரும் ஈடாகமுடியாது. எனவே, ஆண்டாள் மழை முகில்களுக்கு பற்பானாபனின் நிறத்தையாவது கொள்ளுங்கள் என்று சாதிக்கிறாள். 
தாமோதரத்வம்/சௌலப்யம்:
எம்பெருமானின் சௌலப்ய குணத்தை புரிந்துக்கொள்ள திருப்பாவை ஐந்தாம் பாசுரத்தை பார்ப்போம். இந்த பாசுரதுக்கே முதற் எழுத்தான “மாயன்” தான் முக்கியமான சொல். நான்காம் பாசுரத்தில் பார்த்த பற்பநாபனுக்கும், இந்த பாசுரத்தில் நாம் பார்கவிருக்க தாமோதரனுக்கும் இந்தச் சொல் பாலமாக அமைகிறது. பற்பநாபன் உயர் வற உயரும் பெருந்திறலோன். அதாவது, ஜகத்காரகனான பற்பநாபன் நம் சிந்தைக்கு அப்பாற்பட்டவன். நம் ஐம்புலன்களால் அனுமானிக்க (உணர) முடியாதவன். நம்மையும் சேர்த்து இந்த பிரபஞ்சத்தை ஸ்ரிஷ்டிக்கும் அவன் சௌலப்யன் (அனுகமுடிந்தவன்) அல்லன். உயர்ந்த கல்யாண குணங்களின் இருப்பிடமாக உள்ளவன். நம்மாழ்வார் கூறுவது போல் உயர்வற உயர் நலம் உடையவன். ஆனால், நமக்கு நடுவே இராமனாக, கண்ணனாக பிறந்து, நாம் அனுபவிப்பதுபோல் இன்னல்களை அனுபவித்தவனும் அதே நாராயணன். தான் செய்த குரும்புகளுக்காக தாம்புக் கயிற்றால் வயிற்றை சுற்றி கட்டப்பட்டவன் கண்ணன். தன் தந்தையின் வார்த்தைக்கடிபனிந்து பதிநான்கு வருடம் வனவாசியாய் பல இன்னல்களை அனுபவித்தவன் இராமன். ஒரு பாகவதனுக்கு (யசோதை, தசரதன்) அடிபணிந்து எம்பெருமான் செயல்படுவது அவனின் தாமோதரத்வத்தை (எளிதாக அனுகக்கூடியவனாக இருக்கும் தன்மையை, சௌலப்யத்தை ) காட்டுகிறது.

மார்தவம்:
எம்பெருமானின் மார்தவ குணத்தை எடுத்துக்காட்ட மலை நாட்டு திவ்ய தேசமான திருமூழிக்களம் எம்பெருமானை பற்றி திருமங்கையாழ்வார் பாடிய பெரிய திருமொழி பாசுரத்தை பார்போம். ஆழ்வார், இத்தல பெருமாளை “பின்னோர்கள் வணங்கும் சோதி” என்று பாடுகிறார். அதாவது, எம்பெருமானின் விபவ அவாதாரங்களை (இராம, கிருஷ்ண அவதாரங்களை) காணப்பெறாத நம்மை “பின்னோர்கள்” என்று விசேஷித்து, நம்முடைய இக்குறையை தீர்க்கவே எம்பெருமான் இங்கு கோவில் கொண்டுள்ளார் என்பது ஆழ்வார் வாக்கு. இத்தல பெருமாளுக்கு “மார்தவம்” என்ற குணம் மேலோங்கி இருக்கிறது. மார்தவம் என்பது தன்னை சார்ந்தவர்கள் தன்னை விட்டு பிரிவதை சகிக்கமுடியாத ஒரு தன்மை. எனவே, எம்பெருமான் அந்தப் பிரிவை தாங்கிக்கொள்ள முடியாமல் நமக்காக திருமூழிக்களத்தில் கோவில் கொண்டுள்ளான். இத்தலத்து பெருமாளை தரிசிக்கும் போது அவருக்கருகே நாம் சில நொடிகள் கழிப்பது போன்றொரு உணர்வு பிறக்கும்.

Friday, 11 May 2012

திருமாலை - பாசுர அனுபவம்

தொண்டரடிப்பொடி ஆழ்வார் அருளிச்செய்த திருமாலை ப்ரபந்தத்தின் இரண்டாம் மற்றும் மூன்றாம் பாசுரத்தின் அனுபவம்:

திருமாலை பாசுரங்கள் எம்பெருமானுக்கும் ஆழ்வாருக்கும் ஸம்வாதம் நடப்பதைப் போல் அமைந்திருக்கின்றன. இரண்டாம் பாசுரத்தில் ஆழ்வார் "ஒ அழகிய மணவாளனே! இந்த பூலோகத்தில் இருந்துகொண்டே உனது நாமங்களை சொல்லி அனுபவிக்கும் இன்பம் அடியேனுக்கு ப்ராப்யமாக வேண்டும்" என்று வேண்டிக்கொள்கிறார். இவ்வனுபவத்தைவிட நீ எனக்கு உயர்ந்த அந்தஸ்தான பரமபதத்தை கொடுத்தாலும் அது எனக்கு வேண்டாம் என்று சாதிக்கிறார். திருமங்கை ஆழ்வார் தனது திருமடலில் இதே கருத்தை அருளிச்செய்கிறார். ஆழ்வார் பரமபத பதார்த்தம் என்று ஒன்றே கிடையாதென்றும், சாஸ்திர மரியாதைக்காக அதை நான் ஏற்றுக்கொண்டாலும் அவ்வனுபவம் சுவையற்றதாகவே இருக்கும் என்று சாதிக்கிறார். ஆக, இந்த பாசுரம் மூலம், பூலோகத்தில் இருந்து நாம சங்கீர்த்தனம் செய்வதினால் விளையும் அனுபவம் பரமபத அனுபவத்தைக் காட்டிலும் உயர்ந்தது என்று அர்த்தம் விளங்குகிறது.

மூன்றாம் பாட்டில், தொண்டரடிப்பொடி ஆழ்வார் தனக்கு ஸம்ஸாரம் வேண்டாம் என்று அருளிச்செய்கிறார். வேத நூல்கள் கூறியப்படி ஒரு மனிதனுக்கு நூறு வருடங்கள் ஆயுள் இருப்பினும், அதில் பாதி வருடங்கள் உறங்கியே கழிக்கப்படுகிறது என்றும், மீதமுள்ள ஆயுள் சிசுவாக இருக்கும் அவஸ்தையிலும், பாலகனாக விளையாட்டு பருவத்திலும், யௌவனத்தில் இந்த்ரியங்களுக்கு வசப்பட்டு பாபசெயல்கள் புரியும் அவஸ்தையிலும் கழிந்துவிடுவதால் நாம சங்கீர்த்தனம் செய்ய நேரமில்லாமல் போய்விடுகிறது என்றும் சாதிக்கிறார். இதற்கு எம்பெருமான்: "ஆழ்வீர், எனக்கிருப்பதோ இரண்டு விபூதிகளான பரமபதமும் ஸம்ஸாரமும். இவ்விரண்டும் வேண்டாம் என்றால் உமக்கு வேறென்ன தான் வேண்டும்?" என்று வினவுகிறார். அதற்கு ஆழ்வார் "மேற்கொண்டு கூறப்பட்ட இரண்டு விபூதிக்கும் மேற்பட்டு மூன்றாவது விபூதி என்னும்படியான உமது கோவிலிலே அடியேனுக்கு ஒரு இருப்பு அமைத்துக் கொடுங்கள்" என்று வேண்டிக்கொள்கிறார். 

அதாவது பேதை பருவத்திலே அன்னப்ராசனத்துக்காவது சன்னதிக்குள் புகுகின்ற வாய்ப்பு பிறக்குமென்றும், பாலக பருவத்திலே பெருமாள் புறப்பாடு போன்றவை அனுகரிக்கும்படியாய் இருக்குமென்றும், யௌவனத்தில் தான் விரும்புகிற விஷயாந்தரங்களை காணவேண்டியாகிலும் சன்னதிக்குள்ளே புகலாயிருப்போம் என்றும், வயது முதிர்ந்து தள்ளாடும் காலத்திலும் எம்பெருமான் நம் வாசலிலே வந்து நிற்கலாயிருக்கும் என்றும் சாதிக்கிறார். இவ்வாறு கோவில் வாசம் செய்தால், நாம் கனவிலும் பெருமாள் வடிவழகையே நினைப்போம் என்பதனால் தனக்கு கோவிலிலே நித்யவாசம் வேண்டும் என்று எம்பெருமானுக்கு வேண்டுகோள் விடுக்கிறார்.

Tuesday, 20 March 2012

மலையாள நாட்டு திவ்ய தேசங்கள் - Travel Planner

சென்னையிலிருந்து தினமும் இரவு 8:25 மணி அளவில் புறப்படும் "மங்களூரு மெயில்" என்கின்ற ரயிலை பிடிக்கவும். 

முதல் நாள்: 
அதிகாலை 6 மணி அளவில் மங்களூரு மெயில் பட்டாம்பி (பாலக்காடு ஜில்லா) என்கின்ற ரயில் நிலையத்தில் வந்து சேரும். அங்கே இறங்கிக் கொள்ளவும். ரயிலடியிலிருந்து சுமார் 8 கி.மீ. தொலைவில் "திருவித்துவக்கோடு" என்கின்ற திவ்ய தேசம் அமைந்துள்ளது. கேரள வாசிகள் இந்த திவ்ய தேசத்தை "திருமிட்டகோடு" என்று அழைப்பார்கள். இந்த திவ்ய தேசத்தை ஒட்டி பாரத்தப்புழை என்கின்ற நதி ஓடுகிறது. அங்கே ஸ்நானம் செய்து கொள்வதற்கு வசதி உண்டு. சிறிய ஊர் என்பதால், தங்கும் வசதி, சத்திர வசதி எல்லாம் இருப்பதை போல் தெரியவில்லை. 

திருவித்துவக்கோடு சேவை முடித்துக் கொண்டு அங்கிருந்து திருநாவாய் என்கின்ற திவ்ய தேசத்துக்கு செல்லலாம். இந்த திவ்ய தேசம் திருவித்துவக்கோடில் இருந்து ஒரு 35 கி.மீ. தூரத்தில் உள்ளது. திருநாவாய்க்கு குட்டிப்புரம் என்கின்ற ஊர் மார்கமாக செல்ல வேண்டும். திருநாவாய் பித்ரு கர்மங்களுக்கு பெயர் போன ஸ்தலம் என்பதால் தங்கும் வசதி, குளியல்-கழிப்பறை வசதி எல்லாம் உண்டு. திருவரங்கூர் தேவஸ்வோம் போர்டு என்கின்ற அறக்கட்டளை ஒரு சத்திரம் நடத்துகிறது. அங்கே தங்கி இளைப்பாறிக் கொள்ளலாம். ஒரு பதினோரு மணி அளவில் அனைத்து மலையாள நாட்டு திவ்ய தேசங்களிலும் சேவை முடிந்து விடும். அதற்கு பிறகு சாயங்காலம் 5 மணிக்கு மேல் தான் சேவை தொடங்கும். எனவே முதல் நாள் காலையில் இவ்விரண்டு திவ்ய தேசங்களையும் தரிசித்து விடுதல் உத்தமம். 

திருநாவாயிலிருந்து குட்டிப்புரம் மார்கமாக குருவாயூர் சென்று அங்கு தரிசனத்தை முடித்துக் கொள்ளுங்கள். குருவாயூர் திருநாவாயிலிருந்து 47 கி.மீ. தூரத்தில் இருக்கிறது. இந்த ஸ்தலம் திவ்ய தேசமாக இல்லாவிட்டாலும் அபிமான ஸ்தலமாக விளங்குவதால் அங்கேயும் தரிசனம் செய்துக் கொள்ளலாம். ஒரு ஐந்து மணி அளவில் குருவாயூர் சேவை முடித்துக் கொண்டு அங்கிருந்து திருச்சூர் வந்து இரவு தங்கிக் கொள்ளுங்கள். 

இரண்டாம் நாள்:
திருச்சுரிலிருந்து விடியக் காலயிலயே புறப்பட்டு விடுங்கள். முதலில் செல்ல வேண்டிய ஸ்தலம் திருமூழிக்களம். கேரளவாசிகள் “மூழிக்குளம்” என்று இத்தலத்தை அழைக்கிறார்கள். திருச்சுரிலிருந்து சுமார் 50 கி.மீ. யாத்திரை செய்தால் அங்கமாலி ரயிலடிக்கு வந்துவிடலாம். அங்கமாலி ரயிலடியிலிருந்து 13 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள மூழிக்குளம் ராமாயண வரலாறு பாடும் நான்கு கேரள நாட்டு திருக்கோவில்களில் ஒன்று. இத்தலத்தை ஸ்ரீ லக்ஷ்மண க்ஷேத்ரம் என்றும் மக்கள் அழைப்பதுண்டு. ஸ்நானம் செய்ய வேண்டியவர்கள் கோவிலுக்கருகே பாயும் பாரதப்புழை என்ற நதியில் ஸ்நானம் செய்து கொள்ளலாம். திருமூழிக்களத்தில் தங்கும் வசதிகளோ, குளியல்-கழிப்பறை வசதிகளோ கிடையாது. 

திருமூழிக்களம் சேவை முடித்துக் கொண்டு மலா என்கின்ற ஊர் மார்கமாக குலசேகர அழ்வார்
அவதார ஸ்தலமான திருவஞ்சிக்களம் செல்லுங்கள். இந்த ஸ்தலம் TKS புரம் என்று அழைக்கப் படுகிறது. மலாவிலிருந்து TKS புரத்துக்கு கொடுங்கல்லூர் தாண்டி செல்ல வண்டும். அங்கே ஸ்ரீனிவாச பெருமாள் சேவை ஆன பிறகு வந்த வழியிலேயே திரும்பி ஆலுவா (Alwaye) வந்தடையுங்கள். அங்கிருந்து 11 கி.மீ. தொலைவில் கொச்சின் அறிவியல் மற்றும் பொறியியல் பல்கழைக்கழகம் அருகில் அமைந்துள்ள அடுத்த திவ்யஸ்தலமான திருக்காட்கரையை நோக்கி சென்றடையலாம். இத்தலத்தை “த்ரிக்காக்கரா” என்னும் “வாமன க்ஷேத்ரம்” என்னும் ஊர்க்காரர்கள் அழைக்கின்றார்கள். இத்தலங்களுக்கு ரயிலடிகலிருந்து செல்ல ஆட்டோக்கள் கி.மீ. கு 14 ரூபாய் என்கின்ற அடிப்படையில் கிடைக்கின்றன. பதினோரு மணிக்கு முன் தரிசனத்தை முடித்துக் கொள்ளுங்கள். 

அலுவாவிலிருந்து 82 கி.மீ. தூரத்தில் இருப்பது கோட்டயம். கோட்டயத்திலிருந்து 20 கீ.மீ. தூரத்தில் இருப்பது சங்கனசேரி. அங்கிருந்து திருக்கடித்தானம் என்கின்ற திவ்ய தேசத்துக்கு செல்லுங்கள். 5 மணிக்கு கோவில் திறந்த உடன் தரிசனம் முடித்துக்கொண்டு கோட்டயம் திரும்பி விடுங்கள். அங்கேயே இரவு தங்கிக்கொள்ளவும்.

மூன்றாம் நாள்: 
அதிகாலை எழுந்தவுடன் அடுத்த திவ்ய தேசமான திருவல்லவாழ் (திருவல்லா வல்லப க்ஷேத்ரம்) திவ்ய தேசம் சென்றடையுங்கள். திருவல்லவாழ் தொடங்கி திருவண்வண்டூர், திருசிட்டாறு (செங்கன்னூர்/ திருசெங்குன்றுர் என்றும் அழைப்பதுண்டு), திருப்புலியூர் மற்றும் திருவாரன்விளை என்கின்ற திவ்ய தேசங்களுக்கு அடியேன் தெரிவித்த அதே orderil சென்று தரிசியுங்கள். மதியம் 12 மணிப்போல் அனைத்து திவ்ய தேசங்களிலும் சேவை முடிந்துவிடும். செங்கன்னூர் திரும்ப வந்து இளைப்பாறிக்கொள்ளலாம். 

அங்கிருந்து திருவனந்தபுரம் 165 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது. திருவனந்தபுரம் நோக்கி பயணம் செய்து அங்கேயே இரவு தங்கிக்கொள்ளவும்.

நான்காம் நாள்:
திருவனந்தபுரம் கோவில் அதிகாலை 5 மணிக்கே திறந்துவிடும். அதனால் சீக்கிரம் எழுந்து தரிசித்தல் உத்தமம். 7 :30 மணியிலிருந்து 8 30 மணி வரை திருவரங்கூர் சமஸ்தானத்தின் ராஜா ப்ரத்யேகமாக தரிசிப்பார் என்பதால் நமக்கு சேவை கிடைக்காது. எனவே அதற்கு முன்னரே சேவித்து விட்டால் உத்தமம். 

சேவை ஆன பிறகு மார்த்தாண்டம் நோக்கி செல்லுங்கள். இது ஒரு 50 கி.மீ. யாத்திரை. மார்த்தாண்டம் இறங்கிக்கொண்டு அங்கிருந்து திருவாட்டாறு நோக்கி பயணியுங்கள். பனிரெண்டு மணிக்கு முன்னரே அங்கேயும் சேவை முடிந்து விடும். சற்று இளைப்பாரிக்கொண்டு நாகர்கோவில் நோக்கி பயணியுங்கள். சாயங்காலம் 5 மணிக்கு தான் திருவண்பரிசாரம் (திருப்பதிசாரம்) கோவில் திறக்கும். இந்த திவ்ய ஸ்தலம் நாகர்கோவிலிருந்து 8 கி.மீ. தொலைவில் உள்ளது. அங்கே தரிசனம் முடித்துக்கொண்டு நாகர்கோவில் வந்து விடுங்கள். நாகர்கோவிலில் இருந்து இரவு பொழுதில் சென்னைக்கு return train பிடித்துக் கொள்ளலாம். 

மலை நாடு திவ்ய தேசங்களின் சேவை நேரங்களும் தொடர்பு எண்களும்: https://docs.google.com/spreadsheet/ccc?key=0AuU7SxSDu1MldEx6ZENDUzdpal9FSE1vVXJ1R2M1cWc&hl=en_GB#gid=0

Monday, 6 February 2012

திருமூழிக்களம் - திருக்காட்கரை : திவ்யதேச அனுபவம்

ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீமத் வர வர முநயே நம:

அடியேன் குடியரசு தினத்தன்று திருமூழிக்களம் மற்றும் திருக்காட்கரை என்கின்ற மலை நாட்டு திவ்ய தேசங்களுக்கு சென்றிருந்தேன். இத்துடன் அடியேனுடைய மலையாள நாட்டு திவ்யதேச யாத்திரைகள் முற்று பெற்றுவிட்டன. அடியேனுடைய அனுபவங்களை பாகவதர்களுடன் பகிர்ந்துக் கொள்வதற்கே இந்த கட்டுரை.

முதலில் சென்ற இடம் திருமூழிக்களம். கேரளவாசிகள் “மூழிக்குளம்” என்று இத்தலத்தை அழைக்கிறார்கள். அங்கமாலி ரயிலடியிலிருந்து 13 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள இத்தலம் ராமாயண வரலாறு பாடும் நான்கு கேரள நாட்டு திருக்கோவில்களில் ஒன்று. இத்தலத்தை ஸ்ரீ லக்ஷ்மண க்ஷேத்ரம் என்றும் மக்கள் அழைப்பதுண்டு. அதாவது, இராமனை தேடி வந்த பரதன் அவரை வதம் புரிய வந்திருக்கிறான் என்று லக்ஷ்மணன் பாகவத அபசாரம் புரிந்ததற்காக ப்ராயச்சித்தம் தேடிய இடம். இங்குள்ள எம்பெருமானை வேண்டுவதன் மூலம் நாம் தெரிந்தும் தெரியாமலும் செய்யும் பாகவத அபசாரங்கள் ஒழியும் என்பது ஐதீகம். பொருளாதார வளர்ச்சியினால் சற்றும் சீர்குலையாத ஒரு திவ்யஸ்தலம். வாழை, பலா, மா என்ற முக்கனிகளின் தோட்டங்கள் சூழ்ந்த ஒரு அமைதியான (சிறிய) நகரம்.

காலையில் நான்கு மணிக்கே இத்திருக்கோவிலுக்கு அடியேன் வந்து சேர்ந்தபடியால் சந்நிதி திறக்கும் வரை ஒரு மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை. ஆனால் கேரளாவின் வழக்கத்துக்கு மாறாக தேநீர் கடைகள் நான்கு மணிக்கே திறந்துவிட்டன. கோவிலுக்கருகே பாயும் பாரதப்புழை என்ற நதியில் ஸ்நானம் செய்து என்னுடைய நித்யகர்மானுஷ்டானங்களை முடித்துக் கொண்டேன். திருப்பல்லாண்டு துவங்கி எம்பெருமானை சேவித்துக்கொண்டே திருப்பள்ளியெழுச்சி, திருப்பாவை, அமலனாதிபிரான் மற்றும் கண்ணிநுண் சிறுத்தாம்பு பாசுரங்களை ப்ரத்யேகமாக சேவிக்க பாக்யம் கிடைத்தது. இத்தல பெருமாளை பற்றி ஆழ்வார்கள் வாய்மொழிந்த பெரிய திருமொழி மற்றும் திருவாய்மொழி பாசுரங்களையும் சேவித்தேன். இத்தல பெருமாளை திருமங்கயாழ்வார் “பின்னோர்கள் வணங்கும் சோதி” என்று பாடுகிறார். அதாவது, எம்பெருமானின் விபவ அவாதாரங்களை காணக் கிடைக்காத நம்மை “பின்னோர்கள்” என்று விசேஷித்து, நம்முடைய இக்குறையை தீர்க்கவே எம்பெருமான் இங்கு கோவில் கொண்டுள்ளார் என்பது ஆழ்வார் வாக்கு. இத்தல பெருமாளுக்கு “மார்தவம்” என்ற குணம் மேலோங்கி இருக்கிறதாம். மார்தவம் என்பது தன்னை சார்ந்தவர்கள் தன்னை விட்டு பிரிவதை சகிக்கமுடியாத ஒரு தன்மை. எனவே, இத்தலத்து பெருமாளை தரிசிக்கும் போது அவருக்கருகே நாம் சில நொடிகள் கழிப்பது போன்றொரு உணர்வு.

நெய்வேத்யம் முடிந்தக் கையேடு எம்பெருமானின் உற்சவரை கோவிலின் ப்ரஹாரத்தை சுற்றி மூன்று முறை ப்ரதக்ஷனமாய் எழுந்தருள பண்ணுதல் இக்கோவில் மரபு. அந்த சேவை முடிந்த உடனே ஒரு ஏழரை மணிப்போல் ஆலுவா (Alwaye) சென்றடைந்தேன். அங்கிருந்து 11 கி.மீ. தொலைவில் கொச்சின் அறிவியல் மற்றும் பொறியியல் பல்கழைக்கழகம் அருகில் அமைந்துள்ள அடுத்த திவ்யஸ்தலமான திருக்காட்கரையை சென்றடைந்தேன். இத்தலத்தை “த்ரிக்காக்கரா” என்னும் “வாமன க்ஷேத்ரம்” என்னும் ஊர்க்காரர்கள் அழைக்கின்றார்கள். எம்பெருமானின் வாமன அவதாரம் இத்தலத்தில் தான் அரங்கேறியது என்று புராணம். ஆகவே, மலையாளிகள் கொண்டாடும் திருவோணம் இங்கு மிக சிறப்புடனும் செம்மயுடனும் கொண்டாடப்படுகிறது. நகர கோட்டத்துக்கு உட்பட்டிருக்கிற ஸ்தலம் என்பதால் இங்கு ஜனநெரிசல் சற்று மேலோங்கி இருந்தது. எம்பெருமானின் திருக்கோலமும் மற்ற மலை நாட்டு திவ்ய தேசங்களுடன் ஒப்பிடுகையில் சிறியதாக இருந்ததால் அடியேன் கூட்டத்தோடு போராட அவசர சேவையே நடந்தது. பிரதக்ஷனமாய் வந்து நம்மாழ்வாரின் இத்தல பாசுரங்களை சேவித்தேன். ஒரு பத்து மணிப்போல் இரண்டுக்கோவில் தரிசனங்களும் முடிந்துவிட்டன.

பின்குறிப்பு:
இத்தலங்களுக்கு ரயிலடிகலிருந்து செல்ல ஆட்டோக்கள் கி.மீ. கு 14 ரூபாய் என்கின்ற அடிப்படையில் கிடைக்கின்றன. திருமூழிக்களத்தில் தங்கும் வசதிகளோ, குளியல்-கழிப்பறை வசதிகளோ கிடையாது. ஆறு, தோப்பு என்றவாறு திறந்தவெளி வாழ்க்கை தான். எனவே நாகரீக வாழ்க்கைக்கே பழக்கிப்போன நகரப் பயணிகள் ஆலுவா அல்லது எர்ணாகுளத்தில் தங்கி இத்தலங்களை தரிசித்தல் உத்தமம்.

Sunday, 5 February 2012

திருப்பாவை 14 ஆம் பாசுரம் – உங்கள் புழக்கடை

ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீமத் வர வர முநயே நம:

திருப்பாவை 14 ஆம் பாசுரம் – “உங்கள் புழக்கடை…..பாடேலோர் எம்பாவாய்”

பாசுர அர்த்தம்:
உங்கள் புழக்கடை தோட்டத்து வாவியுள் – உன்னுடைய வீட்டின் பின்புறம் உள்ள தோட்டத்தின் குளத்தில்;

செங்கழுநீர் வாய் நெகிழ்ந்து – செங்கழுநீர் என்கின்ற ஒரு வகை தாமரைப்பூவின் வாய் மலர்ந்திருக்கிறது;

ஆம்பல் வாய் கூம்பின காண் – ஆம்பல் மலரின் மொட்டு மூடிக்கொண்டிருப்பதைப் பார்!;

செங்கல் பொடிக்கூரை – சிவப்பு நிறத்து ஆடை அணிந்த ஸந்யாசிகள்; இப்பாசுரத்தில் சிவப்பு நிறத்து ஆடை அணிவது என்பது ராஜஸ குணங்களை தங்களின் தேஹத்துக்கு வெளியே விட்டுவிட்ட முனிவர்களை குறிக்கிறது;

வெண்பல் தவத்தவர் – தங்களுடைய உடல் முழுவதும் சாத்வீக குணம் வழிவதால் வெண்மையான பற்கள் உடையவர்கள் என்று ஸந்யாசிகளை குறிக்கிறது;

தங்கள் திருக்கோவில் சங்கிடுவார் போகின்றார்- ஸந்யாசிகள் அவரவர் திருக்கோவில்களில் சங்கின் கோஷமிட்டு விஸ்வரூப சேவை புரிய போய்க்கொண்டிருக்கிறார்கள்;

எங்களை முன்னம் எழுப்புவான் வாய் பேசும் நங்காய் - எங்களுக்கு முன்னரே எழுந்து எங்களையும் எழுப்புவாய் என்று வாக்கு கொடுத்த பெண்மணியே;

நாணாதாய் நாவுடையாய்- அவ்வாறு கூறிவிட்டு இன்னும் உறங்கிக்கொண்டிருப்பது உனக்கு வெட்கம் தரவில்லையா?

சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக்கையன் – சங்கோடு சக்கரம் கொண்டு சேவை சாதிக்கும் புண்டரீகாக்ஷனை;

பங்கயக் கண்ணானை – தாமரை மலர்கள் போல் கண்கள் உடையவனை;

பாடேலோர் எம்பாவாய் – பாட எங்களுடன் வருவாயாக.

எங்களுக்கு முன்னரே எழுந்து எங்களை எழுப்புவாய் என்று வாக்கு கொடுத்த பாவையே! உன் பேச்சுக்கு முரண்பாடாக இன்னும் ஏன் உறங்கிக் கொண்டிருக்கிறாய்? விடிந்ததற்கு அடையாளமாக உன் தோட்டத்தில் உள்ள செங்கழுநீர் மலர்கள் மலர்ந்து விட்டன. உன் தோட்டத்தில் உள்ள ஆம்பல் புஷ்பங்கள் தங்கள் மடல்களை மூடிக்கொண்டுவிட்டன. சிவப்பு நிற ஆடை அணிந்த வெள்ளை நிற பற்கள் கொண்ட சன்யாசிகள் தங்கள் கோவில்களில் விஸ்வரூப சேவை தொடங்கியதுக்கு அடையாளமாக சங்கின் கோஷம் எழுப்பிக் கொண்டிருக்கிறார்கள். உன் தூக்கத்தை கலைத்து எங்களுடன் சங்கு, சக்கரம் ஏந்தி சேவை சாதிக்கும் தாமரை திருக்கண்கள் கொண்ட எம்பெருமானை பாட உடனே வாராய்!

ஸ்வாபதேச அர்த்தம்:
இந்த பாசுரம் மூலம், ஆசார்ய  சம்பந்தத்தின் முக்கியத்துவத்தை ஆண்டாள் எடுத்துக் காட்டுகிறாள். முன்பு விளக்கத்தில் கூறியவாறு பகவத் அனுபவம் என்பதை ஒரு ப்ரபந்நனால் தனியே அனுபவிக்க முடியாது. ஆசார்ய சம்பந்தம் மூலமே ஒருவனுக்கு பகவத் சம்பந்தம் கிட்டும். ஆகவே, உறங்கிக் கொண்டிருக்கும் தோழியை எழுப்புவதைப் போல் பாவித்து ஆண்டாள் ஆசார்யனை தங்களுடன் பகவத் அனுபவம் புரிய அழைக்கிறாள். ஞானம் மற்றும் அனுஷ்டானத்தின் இருப்பிடமாக உள்ள ஆசார்யன் நம்முடைய பகவத் அனுபவத்துக்கு தடையாக இருக்கும் இடையூறுகளை ஒழித்தெறிந்து நமக்கு பகவத் அணுக்ரஹம் கிடைக்கும்படி செய்ய வல்லர். ஆண்டாளுக்கு கிருஷ்ணானுபவம் கிடைக்க இடையூறாக வாயில் காக்கும் த்வாரபாகலன், நந்தகோபன் மற்றும் யசோதை அமைந்திருக்கிறார்கள். இவர்களை தாண்டி கிருஷ்ணானுபவம் கிடைக்க நாவுடைய பெண்மணியான ஆசார்யனை ஆண்டாள் அழைத்து செல்ல முற்படுகிறாள். இதைத் தான் பாசுரத்தில் “நாவுடையாய்” என்று குறிக்கிறாள்.

திருமங்கை ஆழ்வார், நம்மாழ்வார் தங்களின் பாசுரங்களில் பறவைகளை எம்பெருமானிடம் தூது அனுப்புவது வழக்கம். இவ்வாறு தூது அனுப்பப்படும் பறவைகலானவை ஆழ்வாருக்கு பகவத் சம்பந்தம் ஏற்படுத்த வல்ல “கடக க்ருத்யம்” என்கின்ற சேவையை புரிகின்றன. அதே போல், நமக்கு சமாஸ்ரயணம் மூலம் பகவத் சம்பந்தம் ஏற்படுத்தி கொடுக்கும் கடக க்ருத்யம் புரிபவர் நம்முடைய ஆசார்யன். பறவைகளுக்கு இரண்டு இறக்கைகள் இருப்பது போல நம்முடைய ஆசார்யனுக்கும் இரண்டு இறக்கைகள் உண்டு – அவை தான் ஞானம் மற்றும் அனுட்டானம். இதைத் தான் மணவாள மாமுனிகள் உபதேச ரத்தினமாலையில் “ஞானம் அனுட்டானம் இவை நண்ணாகவே உடைய குருவை” என்று கூறுகிறார். அதாவது, ஆசார்யன் என்னும் ஒருவர் ஞானத்தின் இருப்பிடமானவர் மட்டும் அல்லர். தானும் அனுஷ்டானங்கள் புரிந்து அடுத்தவர்களுக்கு எடுத்துக்காட்டாக திகழ்பவர்.

இப்பாசுரம் மூலம் சக்ரத்தாழ்வார் வைபவத்தையும் ஆண்டாள் விளக்குகிறாள். திருமாலுக்கே அடையாளமாக திகழ்பவர் சக்ரத்தாழ்வார். திருமாலை “சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்” என்று விஷேஷிக்கிறாள். மூன்றாம் திருவந்தாதியில் பேயாழ்வார் கூட எம்பெருமானை விசேஷிக்கும் பொழுது அவர் கையில் இருக்கும் சுடராழியை விவரிக்கிறார். எனவே, பெருமாளுக்கே அடையாளமாக திகழ்பவர் சக்கரத்தாழ்வார்.  சங்கும் சக்கரமும் ஏந்தி சேவை சாதிக்கும் புண்டரீகாக்ஷனை சேவித்தால் நம் பூர்வ ஜன்ம பாவங்கள் தீயினில் தூசாகும் பஞ்சைப்போல மறையும் என்று முன்பு ஒரு பாசுரத்தில் பார்த்தோம். அதே போல், திருமாலின் கையில் இருக்கும் சக்ரதாழ்வாரானவர் நமக்கு பகவத் அனுபவம் கிடக்க தடையாக உள்ள இன்னல்களை உடைத்தெறிய  வல்லர். இதற்கு மேலாக, நமக்கு பெருமாள் திருவடி சம்பந்தம் கிடைக்கவும் வழி புரிபவர் சக்கரத்தாழ்வார். அதாவது, சமாஸ்ரயனத்தின் போது சக்கரத்தாழ்வாரின் சின்னம் நமது கையில் பொறிக்கப் படிகிறது. அவ்வாறு பொறிக்கப்படும் சின்னம் மூலம் நமக்கு ராமானுஜ சம்பந்தம் கிடைத்து நம் பகவத் அடியார்கள் ஆகிறோம் அல்லவா? எனவே, நம்மை காப்பாற்றி, நம் பூர்வ ஜன்ம வினைகளை அழிப்பதுமில்லாமல்,  நமக்கு ராமானுஜ சம்பந்தத்தையும் பெற்று தரும் சக்ரத்தாழ்வாரின் பெருமையை இந்த பாட்டின் மூலம் ஆண்டாள் தெரிவிக்கிறாள்.

பின் குறிப்பு: 
திருமழிசை ஆழ்வார் சக்ரத்தாழ்வாரின் அம்சமாக பிறந்தவர் ஆதலால், அவரின் பாசுரங்களை சேவித்தால், சம்சாரத்தில்  நம்மை கட்டுப்படுத்தி வைக்கும் இன்னல்கள்  தொலைந்து நமக்கு பகவத் அனுபவம் கிடைக்க வழி பிறக்கும் என்றும் கூறலாம்.

திருப்பாவை ஐந்தாம் பாசுரம்: மாயனை மன்னு

ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீமத் வர வர முநயே நம:

திருப்பாவை ஐந்தாம் பாசுரம்: “மாயனை மன்னு……செப்பேலோர் எம்பாவாய்”

பொதுவாக, சாஸ்திரத்தில் நாராயணனுக்கு ஐந்து ரூபங்கள் உள்ளன என்று கூறப்பட்டுள்ளது. அவை பர (பரமபத ரூபம்), வ்யூஹ (திருப்பாற்கடல் ரூபம்), விபவ (அவதார ரூபம்), அந்தர்யாமி (நமக்குள்ளே ஒரு அனுவாய், நம்மை நடத்திச் செல்லுபவன்) மற்றும் திவ்ய தேசத்தில் எழுந்தருளி சேவை சாதிக்கும் அர்ச்சாவதார (அர்ச்ச) ரூபம். இவ்வாறு உள்ள ஐந்து ரூபங்களை மூன்று ரூபங்களுக்குள் அடக்கிடலாம். அதாவது, பரமபத நாதனையும், நம்முள் அந்தர்யாமியாய் இருப்பவனையும் நம்மால் பார்க்க முடியாததால், அவற்றை ஒரே ரூபம் போல் பாவிக்கலாம். அதே போல், எம்பெருமானின் அவதாரங்களை பார்க்க நம்மால் முடியாததனால், திவ்ய தேசத்தில் சேவை சாதிக்கும் கோலத்தில் அவர்களை தரிசித்துக் கொள்ளலாம். உதாரணத்துக்கு, கிருஷ்ணாவதாரம் முடிந்து பல வருடங்கள் கழித்தல்லவோ கோதை பிறந்தாள்? ஆனால், திருவில்லிப்புத்தூரில் இருக்கும் அர்ச்சாவதரமான வாதபாத்ரசாயி பெருமாளையே கிருஷ்ணாவதாரம் எடுத்து ஆய்ப்பாடியில் வசித்த கண்ணனாக பாவிக்கிறாள். அதனால், விபவ மற்றும் அரச்ச ரூபத்தை நாமும் ஒன்றாகவே பாவிக்கலாம். இவ்வாறு இருக்க, எம்பெருமானின் ஐந்து ரூபமானது மூன்றுக்குள் அடங்கி விடுகின்றன. இந்த மூன்று ருபங்களயே மற்ற ஆழ்வார்களும் பெரும்பாலும் பாடியிருக்கிறார்கள்.

திருப்பாவை முதற் பாசுரத்தில், ஆண்டாள் பரமபத நாதனிடம் பகவத் அனுபவம் புரிய கடாக்ஷம் என்ற பறை கேட்கிறாள். இரண்டாம் பாசுரத்தில், திருபாற்கடலில் வீற்றிருக்கும் பரமன் அடி பாட கோட்பாடு விதித்தாள். மூன்றாம் பாசுரம் தொடங்கி ஐந்தாம் பாசுரம் வரை, எம்பெருமானின் விபவ அவதாரங்களான வாமன, இராம மற்றும் க்ருஷ்ணாவதாரங்களை பாடுகிறாள். இந்த வரிசையில், நாம் கிருஷ்ணாவதாரத்தை குறிக்கும் ஐந்தாம் பாசுரத்தைப் பார்போம். இந்த பாசுரத்துடன் திருப்பாவை அவதாரிகை (முன்னரை) முற்று பெறுகிறது.

பாசுர அர்த்தம்: 
மாயனை – நம்மால் க்ரஹிக்கமுடியாத மாயங்கள் புரிபவனை;

மன்னு வடமதுரை மைந்தனை – வடபாரதத்தில் இருக்கும் திருவடமதுரை திவ்யதேசத்தை தன் இருப்பிடமாக கொண்டவனை;

தூய பெருநீர் யமுனை துறைவனை – புனித தீர்த்தம் கொண்ட யமுனை நதியையே பற்றிக்கொண்டிருப்பவனான;

ஆயர் குலத்துள் தோன்றும் அணிவிளக்கை – ஆயர் குலத்துக்கு விளக்காய் வந்துதித்த பெருஞ் ஜோதியை;

தாயை குடல் விளக்கம் செய்த தாமோதரனை – தன்னை ஈன்ற அன்னையின் கர்பத்துக்கு பெருமை சேர்த்தவனை;

தூயோமாய் வந்து நாம் தூமலர் தூவித் தொழுது, வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க – அவனுக்கு நண் மலர்கள் தூவி அவனை சிந்தை செய்தபடி இருந்தோமேயானால்;

போய பிழையும் – ஆதிக் காலத்திலிருந்து நாம் செய்த பாவச் செயல்களும்;

புகுதருவான் நின்றனவும் – பவிஷ்யத்தில் நாம் செய்யப் போகும் பாவ கார்யங்களும்;

தீயினில் தூசாகம் செப்பு ஏலோர் எம்பாவாய் – தீயில் கருகி உருவிழந்து போகும் பஞ்சைப்போல் மறைந்துவிடும்.

ஸ்வாபதேச அர்த்தம்:
திருப்பாவை முதற் பாசுரத்தில் ஆண்டாள் நோன்பை தொடங்குகிறாள். இரண்டாம் பாசுரத்தில் நோன்பு நோற்கும் போது செய்ய வேண்டியதையும் செய்யக் கூடாததையும் சொல்லுகிறாள். மூன்றாம் பாசுரத்தில் ஓங்கி உலகளந்த உத்தமனின் பெயர் பாடும்பொழுது நோன்பு நோற்பவற்கு விளையும் செல்வங்களை கூறுகிறாள். நான்காம் பாசுரத்தில் வருண பகவானை அழைத்து அடைமழையைப் பொழிய ஆணையிடுகிறாள். இந்த ஐந்தாம் பாசுரத்தில், எந்தத் தடையுமின்றி நோன்பு தொடர கண்ணனிடம் சரணாகதி அடைய வேண்டிய தத்துவத்தை விளக்குகிறாள். அதாவது, நான் நோன்பு நோற்கிறேன் என்ற சிந்தை அகன்று கண்ணனே என்மூலம் இந்த நோன்பு நோர்கிறான் என்ற தெளிவு பிறக்கும்போது, இடையூரில்லாமல் இந்த நோன்பு நடந்துவிடும் என்ற சரணாகதி தத்துவத்தை உணர்த்திக் காட்டுகிறாள்.

இந்த பாசுரதுக்கே முதற் எழுத்தான “மாயன்” தான் முக்கியமான சொல். நான்காம் பாசுரத்தில் பார்த்த பற்பநாபனுக்கும், இந்த பாசுரத்தில் நாம் பார்கவிருக்க தாமோதரனுக்கும் இந்தச் சொல் பாலமாக அமைகிறது. பற்பநாபனை நான்காம் பாசுரத்தில் விளக்கும் போது, உயர் வற உயரும் பெருந்திரலோன் என்று ஆழ்வார் கூறியதை பார்த்தோம். ஜகத்காரகனான பற்பநாபன் நம் சிந்தைக்கு அப்பாற்பட்டவன். நம் ஐம்புலனால் அனுமானிக்க (உணர) முடியாதவன். நம்மையும் சேர்த்து இந்த பிரபஞ்சத்தை ஸ்ரிஷ்டிக்கும் அவன் சௌலப்யன் (அனுகமுடிந்தவன்) அல்லன். உயர்ந்த கல்யாண குணங்களின் இருப்பிடமாக உள்ளவன். நம்மாழ்வார் கூறுவது போல் உயர்வற உயர் நலம் உடையவன்.

ஆனால், நமக்கு நடுவே இராமனாக, கண்ணனாக பிறந்து, நாம் அனுபவிப்பதுபோல் கஷ்டங்களை அனுபவித்தவனும் அதே நாராயணன். தான் செய்த குரும்புகளுக்காக தாம்புக் கயிற்றால் வயிற்றை சுற்றி கட்டப்பட்டவன் கண்ணன். தன் தந்தையின் வார்த்தைக்கடிபனிந்து பதிநான்கு வருடம் வனவாசியாய் பல இன்னல்களை அனுபவித்தவன் இராமன். ஒரு பாகவதனுக்கு (யசோதை, தசரதன்) அடிபணிந்து எம்பெருமான் செயல்படுவது அவனின் தாமோதரத்வத்தை (எளிதாக அனுகக்கூடியவனாக இருக்கும் தன்மையை , சௌலப்யத்தை ) காட்டுகிறது. இந்த உலகத்தை ஸ்ரிஷ்டித்து நாம் உயர உயர நம்மால் அணுகமுடியாமல் இருக்கும் பற்பநாபந்தான் நம்முடைய நடுவே அவதரித்து நம்மைப்போல் வாழ்ந்து காட்டியவன். இவ்வாறு அவன் அவதாரம் எடுக்கும் போது, ஜீவாத்மாக்களுக்கு அவனிடமே சரணாக புகல ஒரு வாய்ப்பை வழங்குகிறான்.

திருப்பாவை நான்காம் பாசுரம்: ஆழிமழைக் கண்ணா

ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீமத் வர வர முநயே நம:

திருப்பாவை நான்காம் பாசுரம்: “ஆழிமழைக் கண்ணா…..மகிழ்ந்தேலோர் எம்பாவாய்”

“ஓங்கி உலகளந்த” பாசுரம் மூலம் ஆண்டாள் எப்படி திருமந்திரத்தின் அர்த்தத்தை உள்ளுரைப் பொருளாக தெரிவிக்கிறாள் என்று நேற்று பார்த்தோம். இன்று, “ஆழிமழைக் கண்ணா” பாசுரம் மூலம் நாரணனின் பரத்வத்தை எப்படி விவரிக்கிறாள் என்று பார்க்கலாம்.

பாசுர அர்த்தம்:
ஓ மழை மேகங்களே! இடைவிடாமல் மழையாய் பொழியுங்கள்! சமுத்திரத்தில் இருக்கும் மொத்த நீர்த்துளிகளையும் ஆவியாகக் கொண்டு மேகங்கள் செய்து, இந்த உலகை ஸ்ரிஷ்டிக்கும் பற்பநாபனின் திருமேனி நிறத்தைப் பெற்று, இராமனின் வில்லிலிருந்து புறப்படும் அம்புகள் போல் இந்த தரணியை நனைப்பீர்களாக! திருமாலின் வலக்கையில் இருக்கும் சுதர்சன சக்கரத்தின் ஒளி போல் மின்னலுடன் மற்றும் அவரின் இடக்கையில் இருக்கும் சங்கின் கோஷம் போல் இடியோசையுடன் இப்புவியில் வசிப்போரின் வாழ்வைச் செம்மைப்படுத்த மழையாய் வாருங்கள்!

ஸ்வாபதேச அர்த்தம்:
வருண தேவர், ஒரு முறை பாகவத அடியார்களுக்கு சேவை புரிய எண்ணினார். ஆண்டாள், வருண தேவரிடம், பாகவத அடியார்களுக்கு பணிவடையாய் மார்கழி நோன்பின் போது இடைவிடாத மழையை பொழிய ஆணையிட்டாள். அதைத் தான் “ஆழி மழைக் கண்ணா, ஒன்று நீகை கரவேல்” என்று கூறுகிறாள். சமுத்திரத்தின் அடிவரை சென்று (ஆழியுள் புக்கு) நீர்த்துளிகளை சப்தம் இட்டுக்கொண்டே ஆவியாக்கி (முகர்ந்துக்கொடு ஆர்த்தேறி), உலகத்தை ஸ்ரிஷ்டிக்கும் பற்பநாபன் போல் கருமை நிறங்கொண்டு (ஊழி முதல்வன் உருவன் போல் மெய்கருத்து), பற்பநாபன் வலக்கையில் இருக்கும் சுதர்சனரின் ஒளி போல் மின்னலுடன் (ஆழி போல் மின்னி) மற்றும் பற்பநாபனின் இடக்கையில் இருக்கும் வலம்புரி சங்கை போல் கோஷமிடும் இடியுடன் (வலம்புரி போல் நின்று அதிர்ந்து) இப்புவில் உள்ளோர் செழிப்போடு வாழ மழையாய் பெய்திட வாராய் என்று கோருகிறாள்.

இப்பாசுரத்தில், “பற்பநாபன் போல் நிறம் கொண்டு” என்று எதுக்கு ஆண்டாள் சாதிக்கிறாள் என்ற சந்தேகம் எழலாம். ஏன் இராமன் போல் நிறம் கொள்ளக் கூடாது? ஏன் கண்ணன் போல் நிறம் கொள்ள கூடாது? இந்த உலகத்தை படைக்கும் பற்பநாபனானவன் அளவில்லாத காருண்யத்தின் இருப்பிடம். அதாவது, நாம் செய்யும் பாவங்களை எல்லாம் சகித்துக்கொண்டு ஒவ்வொரு முறையும் இந்த உலகத்தை படைத்து நாம் உய்ய இன்னொரு வாய்ப்பளிக்கும் கருணைக் கடல் அல்லவோ அவன்? அவன் காருண்யத்துக்கு முன் ஒப்பொருவர் இல்லை. அளவுக்கு அதிகமாக காருண்யம் உடையவன் ஆதலால் அவன் திருமேனி கரு நிறத்தை கொண்டதாக அமைகிறது. மழை தரும் கார் முகில்கள் மழை தந்தபின் வெண்ணிறமாக மாறி விடும். ஆனால், பற்பநாபன் இடையே காருண்யத்துக்கு தட்டுப்பாடு ஏற்படுவதே இல்லை. ஆதலால், அவரின் திருமேனி நிறம் போல் வண்ணம் பெறுங்கள் என்று மழைமுகில்களுக்கு ஆண்டாள் கோரிக்கை விடுகிறாள்.

அகலமான அழகிய தோள்கள் கொண்டவன் பற்பநாபன் (பாழியம் தோளுடையவன்). இவ்வாறு ஜகத் காரண பூதனாக விளங்கும் பற்பநாபனை ஆழ்வார் “உயர்வற உயரும் பெருந்திரலோன்” என்று அழைக்கிறார். அதாவது, நாம் எந்த அளவுக்கு நம் அறிவை உபயோகித்து அவனை புரிந்துக் கொள்ள முயல்கிறோமோ, அவ்வளவுக்கு அவ்வளவு நம் பிரயத்னம் வீணாகும். தன் அசாத்திய திறனால் தன் அந்தஸ்த்தை உயர்த்திக் கொண்டே போகவல்லவன் பற்பநாபன். அப்பேர்பட்ட பற்பநாபனை அடைவது எளிதான விஷயம் அல்ல என்றபடியால் தான் இஜ்ஜகத்தில் அவதரித்து நம்முடன் வாழ்ந்த இராமனையும் கண்ணனையும் பற்றிக்கொள்ள அவசியம் ஏற்படுகிறது.

கூரத்தாழ்வார் நாபிக்கமலத்துடன் சேவை சாதிக்கும் பற்பநாபனின் திருக்கோலத்தை ரசிக்கிறார். எம்பெருமானின் திருமேனி சௌந்தர்யத்தை சிரஸில் இருக்கும் க்ரீடத்திலிருந்து அவர் திருப்பாதம் வரை ஓடும் ஒரு நதியாய் பாவிக்கிறார். சிரஸிலிருந்து தொடங்கும் சௌந்தர்ய நதியானது அவர் திருமார்பில் பட்டு அநேக நதிகளாக பிரிகின்றன. அவ்வாறு பிரிகின்ற நதிகள், எம்பெருமானின் நாபியில் சங்கமித்துக்கொண்டு ஒரு சுழற்சியை உண்டாக்குகின்றன. அவ்வாறு உண்டாகும் சுழற்சி ஏழு மடல் கொண்ட தாமரையாய் நாபியிலிருந்து உருவெடுக்கிறது. அத்தாமரையின் மேல் வீற்றிருக்கும் பிரம்மனே (நான்முகனே) அவர் ஸ்ரிஷ்டித்த முதற் குழந்தையாக திகழ்கிறார்.

இந்த உலகத்துக்கு காரணகர்த்தா நாரணனே என்று அருமையான உதாராணம் கொண்டு கூரத்தாழ்வார் சாதிக்கிறார். இவ்வுலகின் தோன்றும் அனைத்து ஜீவன்களுக்குமே ஒரு விதை என்கின்ற மூலம் இருப்பது போல், இந்த உலகத்துக்கும் ஒரு விதை இருக்க வேண்டாமா? அந்த விதையைத் தான் தன் உதிரத்தில் (வயிற்றில்) பிரளய காலம் முடிந்த உடன் நாரணன் விதைக்கிறார். இதைத் தான் அமலனாதிபிரானில் திருப்பாணாழ்வார் “அண்டரண்ட பகிரண்டத்து ஒருமாநிலம் எழுமால் வரை” என்று கூறுகிறார். அவ்வாறு விதைப்பட்ட விதையானது நாபி கமலமாய் முளை விட்டு உலகத்தின் தொடர்ச்சியை உணர்த்திக் காட்டுகிறது.

பிரளயகாலம் முடிந்து ஸ்ரிஷ்டிக்கு உரிய நேரம் (ஊழி) தோன்றும் போது, நாரணன் தன் படைப்பை தொடங்குகிறான். முதலில் பஞ்ச பூதங்களையும் பஞ்ச தன்மாத்திரங்களையும் படைக்கிறான். அதற்கு பிறகு பஞ்ச கல்மேந்திரியங்கள், பஞ்ச ஞானேந்திரியங்கள், மூலம், அஹங்காரம் மற்றும் ப்ரக்ருதியை படைக்கிறான். அதற்கு பிறகு தான் பிரம்மனையும் மற்ற சித்-அசித்களையும் படைக்கிறான். இவ்வாறு பற்பநாபனால் படைக்கப்படும் முன், இவை எல்லாமே அவனுள் ஒன்றாய் சூஷ்ம தசையில் வசித்து கொண்டிருக்கும். இவ்வுலகம் ஸ்ருஷ்டி ஆன பின்பு சித்-அசித்கள் ஸ்தூல தசையை அடைகின்றன. இவ்வாறு உலகை ஸ்ரிஷ்டிக்கும் பற்பநாபனே பரமன், அவனை மிஞ்சிய ஜகத்காரண கர்த்தா இன்னொருவர் இல்லை என்று திருமழிசை பிரான் நான்முகன் திருவந்தாதி முதற் பாசுரத்தில் சாதிக்கிறார்: “நான்முகனை நாரணன் படைத்தான், நான்முகன் தன்முகானாய் சிவனைப் படைத்தான்”. இதே தத்துவத்தை இந்த பாசுரம் கொண்டு ஆண்டாள் நமக்கு விளக்குகிறாள்.

பாகவதர்கள் ஒரு விஷயத்தை நன்கு புரிந்துக்கொள்ள வேண்டும். இப்பிரபஞ்சத்தை ஸ்ரிஷ்டிக்கும் போது எம்பெருமான் எங்கிருந்தோ பொருள் கொண்டு வந்து ஸ்ரிஷ்டிப்பதில்லை. தன்னையே கொண்டு தான் ஸ்ரிஷ்டிக்கிறார். எனவே, இவ்வுலகம் மற்றும் இவ்வுலகம் தாண்டி காணப்படும் சித்-அசித் அனைத்துமே பிரம்மத்தின் பிரதிபலிப்பே என்று நாம் புரிந்துக் கொள்ள வேண்டும்.